சொல்
சொல்லுக்குள்ளே
குடிசை எழும்புது.
குடிசை திறந்து
இருளின் மணி
இருந்த விழி.
விழியின் உள்ளே
கூரை கிழிந்து
உதிர்ந்த கதிர்த்தூள்.
கதிர்த்தூள் சேர்ந்து
கனன்று குதித்து
குடிசை?
வானில்
புகையின் வடுக்கள்...
எழுத்து, செப். 1963
கோவில்
சிரசு குவித்து
வான்காட்டி ஆசையூட்டி
இடைவிரித்து அழைத்திழுதன
கோபுரப் பாறைகள்...
நிழல் நடனம்
கல்சமைந்தது சிலைக்குவியல்
குவியல் நடுவே
குவிந்த இமைவிரலிடுக்கில்
உருகி வழிந்த
கண்ணின் நிணத்தை
பக்தி விடாய்க்கு
பருகிக் கொண்டது
விக்ரஹம்.
எழுத்து, ஜூன்-ஜூலை 1964.
லௌகீகம்
கடலும் சுருங்கும்
நெருப்பும் தடுமாறும்
காற்றின் விரல்களும்
வெறும் வெளி வீணையில்
பேசாமல் மடங்கும்;
வானத்தில்
பரிதியே நின்று
கிணற்றுள் தன் பிம்பத்தை
பட்டம் விட்டாலும்
குடிதண்ணீர்
வாளி வீச்சில்
நடுங்காது நிற்குமா?
அலைக்காமல்தான்
அள்ள முடியுமா?
எழுத்து, செப். 1965
ஊமை
மனிதனின் பேச்சு அவனுக்கு
பிடிபடாது.
பேசாத வேளையில்
ஊமைககளாகின்றன
பாஷைகள்.
நக்ஷத்திரங்களைவிட
நிறையவே பேசுவது
அவற்றின் இடையுள்ள
இருள்.
எனவேதான்,
தன் தனி வழியில்
நம்பிக்கை குலையாமல்
பேச்சுக்கும் அப்பால்
தாண்டி,
அவன் கண்ட கலை
சமிக்ஞை.
(1973)
பசி
சித்திரை முதல் நாள்
காலை
மேஷத்தில்
பரிதி உதிக்கப்
பார்த்தேன்.
பார்த்தவுடன்
கண்களை மூடிக்
கண்டேன்.
பரிதி
இமைகளின் செவ்விருளில்
பச்சையாய்த் துளிர்ந்தது.
பசித்து மெலிந்த மேஷம்
அதுதான், ஆடு -
துளிர்த்ததை மென்றது.
திடுக்கிட்டுக் கண்விழித்தால்
எங்கும்- வானெங்கும்
இருட்டு!
உதித்திருந்த
சூரியனைக் காணேன்!
(1976)
கலப்பு
1. கண்கள்
உயர் ஜாதிக்காரி
ஒருத்தி நகத்தோடு
என்பறை நகம்மோதி
மனம் அதிர்ந்தது.
கோபத்தில் மோதி
கலந்தன கண்கள்
பிறந்தது ஒரு
புதுமின்னல்
ஜாதியின்
கோடை மேவிப் பொழிந்தது
கருவூர்ப் புயல்...
கசடதபற, ஜூலை 1972.
2. புகைகள்
உயர் ஜாதிக்காரி
ஒருத்தி நகத்தோடு
என்பறை நகம்மோதி
ஊர் அதிர்ந்தது.
ஐயாயிர வருஷத்து
இரவு சிவந்து
எரிந்தது என்சேரி-
புகைகள் கலந்து
இருண்டது இன்ரென்
உதய நெருப்பு...
(1980)
திசை மாற்றம்:
கல்லில் ஊன்றிற்று
சிற்பியின் உழுபடை.
வயல் வெளியின்
மண்ணில் ஊன்றி
உழுதது உளி.
தசையின் எஃகு
சிலிர்க்கச் சீறி
உருகி பிறந்த
உழுபடை விந்துவாய்
கருப்பை வயலில்-
புகுந்தது கடல்.
காற்றும் வெளியும்
பிணைந்து பிறந்த
உறுமல் ஒன்று
கடலுள் உதிர்ந்தது.
முதல் நான்கும்
திசைமாறி
ஒன்றுள் ஒன்று
முனைமாறி
கல்லைப் பிளந்தது
நரசிம்ஹமல்ல-
கைகூப்பி அழுத
சிசுவின் குரல்.
கனரக இரும்புத்
தரையைக் கிழித்தது
வராஹமுமல்ல-
ஒரு மணி நெல்.
கடலின் தலைகீழ்ப்
பெருவெளி எங்கும்
ஒரேயொரு முனை.
கூர்மம், மச்சம்
ஏதுமல்ல, அது
இமைக்கொட்டாத
இக்கணம்.
உன்னதம், ஏப்ரல் 1994
0 comments:
Post a Comment