There is no end to education. It is not that you read a book, pass an examination, and finish with education. The whole of life, from the moment you are born to the moment you die, is a process of learning.

- Jiddu Krishnamurti


Monday, January 9, 2012

பிரமிள் கவிதைகள் - ஒரு அனுபவம்


சைத்ரீகன்

வெண்சுவர்த் திரையிலென்
தூரிகை புரண்டது.
சுவரே மறைந்தது.
மீந்தது காட்சி.
ஓஹோ,
உயிர்த்தெழும் ஒலிக்கு
இருள் ஒரு திரையா?
பாழாம் வெளியும்
படைப்பினை வரையவோர்
சுவரா?

எழுத்து. டிச. 1961



மின்மினி

வெள்ளித் தூளின் பாதை தூவி,
மெல்லக் காற்றுள் வீழும் விண்மீன்;
வாழ்வின் கணங்கள் ஒளிர, இடையில்
ஆவி அணைந்து இருளுள் மறையும்;
உடலே கண்ணாய் இமைக்கும்; இரவின்
கடலுள் தானே விளக்காய் அலையும்...
இருளில் திரண்ட குளிகை மேனி,
கருகிக் கருகி எரியும் வாழ்வு...
இரவை மூடும் தனிமை, அங்கே
இருளுள்ளே உன் மவுனக் குரல்கள்...

எழுத்து, ஜன. 1962


மின்னல்

ககனப் பறவை
நீட்டும் அலகு
கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை
கடலுள் வழியும் அமிர்த தாரை
கடவுள் ஊன்றும் செங்கோல்

எழுத்து பிப் 1962


விசாரம்

உயிர் நீர் 
ஊறும் கிணாறா
உடல்?

உயிர்தானென்ன?
வானைக் கிழித்த
ஆதிப்பெருமால்
நிலத்தில் பதித்த
விழுது.
உடலோ?
விழுதைத் தொட்டு
விழுங்க முனைந்து 
ஊர்ந்து உதிர்ந்து 
வீழும் நத்தை.

எழுத்து, மார்ச் 1962



கதவு

நிழல் விழுத்தும் அகாதம்
தட்டாது தானே திறக்கும் கதவு
ஆனால் தேனீ தட்டாது
மொட்டு திறக்காது
சுற்றும் விட்டிலும்
சுடருக்குக் கதவு தேடி
சிதறி விழும்- இதோ
இப்போ இப்பாறைச்சுடருள்
புகுந்தவன் யார்?
சுவர் நடுங்க உள் நின்று
உதைப்பவன்?
சுடரிதழ் விரிந்தது - தெரிந்தது
அகாதம்.


எழுத்து, மார்ச் 1962



பல்லி 

கவிதை - 
இறக்கத் துடிக்கும் வாலா?
உயிரைத் மீண்ட உடலா?

எழுத்து. செப். 1963.

பார்வை



நிலவை மழித்தான்

தேவ நாவிதன்.

சிகையாய் முகில்கள்.

வானில் விரிந்தன.

மனிதன் வியந்து.

கவியானான்.

வெயிலை வழியவிட்டான்

வெளிக் கடவுள்.


இரவு பகலுக்கு


எதிரிடை யாச்சு.

மனிதன்

இருமையை விசாரித்தான்.


போகப் போக


வியப்பும் விசாரமும்


தளரத் தளர


மீந்தது கண்வெளி


உலகு ஒன்றே.



இன்று


சூர்ய சந்திரச்


சிற்றணு ஒதுக்கி

புவனப் படர்ப்பை

கால வெளியைக்

கணித நோக்கால்

கடந்து


நட்சத்திர மண்டல

காலக்ஸிக் குவியல்

குவாஸர் சிதைவைக்


கண்டான்.


கொஞ்சம் வியப்பு


ஒருகண விசாரம்


மறுகணம் மனிதன்


கண்டதைப் பிடித்து


ஆராய்ந்தான்.


கண்டதைக் கண்டது


கண்ணீர் விட்டது.


நடை, ஏப்ரல் 1969



http://www.kalachuvadu.com/issue-92/page34.asp



சொல்


காதலன் பேச்சில் 

கருத்தைச் சிதைத்தன
சொற்கள்


அவள் சொல்லோ
மணலில் விரல் விட்ட
வடு


கண்களின் நோக்கில்
சிதையாத 
கரு.


நடை ஏப்ரல் 1969




கோத்ரம்

சூர்ய உவாச:
ஒரு நூறு உதடுகள் விரித்து
என்னைச்
சிரித்துக் குடிக்க நினைக்கும்
தாமரைப் பூவே
உன்பிறவி ரகஸியம் அறியேனோ?
உன் தந்தையின் வேர்த்தாடி
நிலம் தேடி
சகதியைப் புணர்ந்துறிஞ்சிப்
பிறந்தவள் நீ.
ஓ! - கண்ணற்று
முகமே வாயெனப் பிளந்து
என் ஒளியைக்
குழாய் ஜலமாய்க்
குலஹீனம் செய்யும் ஜடமே!
உன் கபந்த விடாய்க்கு நான்
ஓவர் ஹெட் டாங்க் அல்ல -
ஒளி!


கசடதபற, ஜூலை 1972.

பிரதி

தெருவில் விழுந்து
நிலவின் ஒளியைத் துடைத்தது
மின்சார வெளிச்சம்!

உயரத் தனித்தது நிலா,
வேட்கையில் தனித்தன
மனித முகங்கள்

கேட்டு அழுது
கேட்டழுது
கண்ணாடியில் பிடித்து
கண்டுகளித்த நிலவில்
புரையோடும்
குழந்தை ராமன் கருமை.

வாலிபத்தில் இவன் தனது
சீதாவைத் தொலைத்துவிட்டுத்
தேடிய நிழல்.

அவதாரம்தான்
இருந்தும் முகத்தில் 
ஊனின் புரையோட்டம்.

தனித்து
வேட்கையில் துணிந்து ஓர்
தாசியைத் தேடும் இம்
மனித முகத்தில்
நிலவின் புரையோட்டம்

வீதி வெளிச்சத்தில்
நிலவை நோக்கி
நிலத்தில் விழுகின்றன
மனித நிழல்கள்.


கசடதபற, ஜூலை 1972.



குருக்ஷேத்ரம்

இன்று வேலை நிறுத்தம்
’கடமையைச் செய்
பலனை எதிர்பார்க்காதே’
என்று சொல்லிவிட்டு
காரில் நழுவப் பார்த்த
கண்ண பிரானுக்குக்
கல்லடி!

சுவரெங்கும்
பசிவேத சுலோகங்கள்!
அர்ச்சுனன் கிளைத்து
அரக்கனாய்
கார்த்த வீர்யார்ச்சுனனாய்
தலை ஆயிரம்
கை இரண்டாயிரம்!

கண்ணபிரான் நெற்றியிலே
உதிரத்தின்
நாமக் கோடுகள்!

விஸ்வரூபத்திற்கும்
முயற்சிக்க வலுவில்லை.

இருந்த கால்களில்
எழும்ப முயன்றான்.
‘கீதையைக் கேட்க 
அர்ச்சுனன் இல்லையென்றால்
கூப்பிடி கெளரவரை’ யென்றான்.

பறந்தது போன் செய்தி
போலீசுக்கு.


(1973)


நாளை புரட்சி

வயிற்றில் குடியிருந்து
வாழ்ந்து பசிக்கிறது
நிகழ்காலம்

பசியில் அடைத்த
காதிலும் விழுகிறது
‘நாளை புரட்சி
சரித்திரம் நமது கட்சி’
என்றென் 
பசியைக் கூட
ஜீரணிக்க முயற்சிக்கும்
ஏப்பக் குரல்கள்.

ஆனால்,
நாளைகள் ஒவ்வொன்றும் 
நாள்தோறும் நேற்றாக 
தன்பாட்டில் போகிறது
தான்தோன்றி சரித்திரம்.


(1973)

பாலை

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.


என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.

*
(1973)



முதுமை




காலம் பனித்து விழுந்து

கண்களை மறைக்கிறது

கபாலத்தின் கூரையுள்

ஒட்டியிருந்து

எண்ணவலை பின்னிப்பின்னி

ஓய்கிறது மூளைச் சிலந்தி.

உணர்வின் ஒளிப்பட்டில்

புலனின் வாடைக் காற்று

வாரியிறைத்த பழந்தூசு.



உலகை நோக்கிய

என்விழி வியப்புகள்

உயிரின் இவ் அந்திப்போதில்

திரைகள் தொடர்ந்து வரும்

சவ ஊர்வலமாகிறது.

ஒவ்வொரு திரையிலும்

இழந்த இன்பங்களின்

தலைகீழ் ஆட்டம்

அந்தியை நோக்குகிறேன்.

கதிர்க் கொள்ளிகள் நடுவே

ஏதோ எரிகிறது. . . . . . .

ஒன்றுமில்லை,

பரிதிப்பிணம்.




(1973)

http://www.srmuniv.ac.in/tamil_perayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt01/html/mat01005pp5b.htm






நம்பிக்கை



கல்லில்

சிரிப்பைச் செதுக்கி

பூவைப் பிடுங்கி

அடித்தேன் கல்லில்

‘பூஜை’என்று

கும்பிட்டது

கும்பல்.

ஏதோ சிரிப்பு

எங்கிருந்து?

உள்ளிருந்தா?

வெளியிருந்தா?

செத்து செத்து

உபதேசிக்கிறது

பூவின் சிரிப்பு.

கேட்டேன்

பூவைக்

கும்பிட்டேன்.


ஊரைப் பார்த்து

‘கல்லின் சிரிப்பு

முறைப்பு’ என்றேன்.

கேட்ட கும்பல்

கல்லைப் பிடுங்கி

பூவையடித்தது.



0 comments: